பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நீதிராஜ் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு), காவல் ஆய்வாளர் அஜீம், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் இந்தோ அறக்கட்டளை திரு.முகமது உசேன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமதி.அருள்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தை திருமணம் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதில் ஈடுபடும் அனைவரும் குற்றவாளியாக கருதப்படுவார் என்பதை அனைவரும் உணர வேண்டும் மேலும் நமது மாவட்டத்தில் குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க பொதுமக்கள் தகவல் தெரிவிக்க சைல்டு லைன் எண்கள் 1098, மாவட்ட சமூக நல அலுவலக எண் 04328-224122, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் எண் 04328-275020 மற்றும் காவல்துறை ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
மேலும் ஊரடங்கு காரணமாக குழந்தைகளின் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்கவும் இணையதள விளையாட்டுகளில் ஈடுபடா வண்ணம் தகுந்த அறிவுரை வழங்கவும் அதிகமான நேரத்தை குழந்தைகளுடன் செலவிட வேண்டும் எனவும், குழந்தைகளிடம் நன்மை,தீமை, பகுத்தறிதல் ஆகியவற்றை பற்றிய உரையாடல் எப்பொழுதும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் இணையதள வகுப்புகள் பள்ளி நிர்வாகத்தினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் குழந்தை பாதுகாப்பில் அனைத்து துறையினரும் இணைந்து பணியாற்றுதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.