அரியலூர்: குழந்தைகள் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மற்றும் கலந்து கொள்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பதிவு செய்யபடும் என மத்திய மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்தார். இந்நிலையில், அரியலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், பொதுமக்களிடையே பேசும்போது…
“அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. குழந்தைகள் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மற்றும் கலந்து கொள்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்யபடும்.
அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி ஒவ்வொரு கிராமங்களிலும் செயல்பட்டு வருகிறது” என்றார்.
முன்னதாக, சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.