தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை விற்பனைக்காக கடத்திய இருவர் கைது – 4 குழந்தைகள் மீட்பு – தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தைகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் திரு. என். கண்ணன் இ.கா.ப அவர்கள் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப. அவர்கள் ஆகியோர் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2022 அன்று ஒரு 2 ½ வயது குழந்தையும், குலசேகரன்பட்டிணம் காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.10.2023 அன்று ஒரு 2 வயது குழந்தையும் மற்றும் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 09.03.2024 அன்று ஒரு 4 மாத குழந்தையும் காணவில்லை என சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பெற்றோர்களால் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் மேற்படி குழந்தைகளை கடத்தியவர்களை கண்டுபிடித்து, குழந்தைகளை மீட்க பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
மேற்படி தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
சந்தேக குற்றவாளிகளில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்து, விசாரித்தபோது, இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களான ஆலங்குளம், அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சாமி (எ) கருப்பசாமி 47. என்பதும் ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (எ) ராஜா 53. என்பதும், அவர்கள் மேற்படி குழந்தைகள் உட்பட மொத்தம் 4 குழந்தைகளை கடத்தியதும், அவர்கள் இந்த குழந்தைகளை குழந்தையில்லாதவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து, இதுவரை புகார் அளிக்காத ஒரு குழந்தை உட்பட 4 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட 4 குழந்தைகளையும் ‘குழந்தைகள் நல குழு” (Child Welfare Committee) மூலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க இரவு, பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரை மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் திரு. என். கண்ணன் இ.கா.ப அவர்கள் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் மாவட்டட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர்.