குழந்தைகளின்,ஞாபகசக்திக்கு : ‘படிக்கும் பாடங்கள் எழுதும்போது சட்டென மறந்து க்ளீன் ஸ்லேட்டாகி விடுகிறான். கேள்வி கேட்கும்போது சரியான பதில் சொல்பவன், தேர்வில் மறதியினால் தவறாக எழுதிவிடுகிறான்’ என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் தேர்வுநேரப் புலம்பல். படிப்பில் கவனம் செலுத்துவதற்கு ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர். என்ன சாப்பிடலாம்? பழங்கள், நட்ஸ், உலர்ந்த பழங்கள், பழச்சாறுகளைத் தினசரி உணவோடு சேர்த்துக்கொள்ளலாம். இதிலுள்ள செலினியம், மக்னீசிய தாது உப்புக்கள் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. வால்நட்ஸ், அக்ரூட், பாதாம் வகைகளைத் தினமும் சாப்பிடக் கொடுக்கலாம். வல்லாரைக் கீரையிலுள்ள இரும்பு மற்றும் மக்னீசியம் ஞாபக சக்திக்கு உத்வேகம் தரும். அவரைக்காய், வெண்டைக்காயில் டோபோமைன் சத்து மூளையினைத் தூண்டிவிட்டு செயல்பட உதவுகிறது.
உணவில் தயிர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்வதோடு அதன் சத்துக்களை உறிஞ்சும் தன்மையும் தயிருக்கு உண்டு. வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்கள் சாப்பிடலாம். எப்போது சாப்பிடலாம்? ‘‘காலை ஏதாவது ஒரு பழம் மற்றும் நட்ஸ் கொண்ட மில்க்ஷேக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துமாவு, பொட்டுக்கடலை (அ) கேழ்வரகு கஞ்சி சாப்பிடுவதால், அதில் உள்ள கால்சியம் உடலுக்கு வலு தரும். ஸ்நாக்ஸாக முளைகட்டிய பயிறு, உலர்ந்த பழங்கள், நட்ஸ், சுண்டல். மதிய உணவுக்கு புரதச்சத்து உணவுகள். வெண்டைக்காய், பாலக்கீரை, வல்லாரைக்கீரை என ஒரு கீரை வகை உணவில் அவசியம்.
கீரை சாப்பிடாத குட்டீஸ்களுக்கு கீரை மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து புலாவ் செய்து தரலாம். பனீர், மீன், முட்டை, மஷ்ரூம் உணவுகளும் சாப்பிடலாம். மாலையில் பழங்கள், பழச்சாறுகள், சுண்டல்கள், வேக வைத்த கடலை, வேர்க்கடலை (அ) பொட்டுக்கடலை உருண்டை சாப்பிடலாம். இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் பால் அருந்தலாம். சத்துமாவு, பொட்டுக்கடலை (அ) கேழ்வரகு கஞ்சி இரவில் சாப்பிட்டால் ஜீரணிக்காமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள், சிப்ஸ் போன்ற உணவுகள் மூளையை மந்தமாக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு வடிவிலான உடற்பயிற்சி அவசியம். காபியிலுள்ள காஃபீன் குறிப்பிட்ட நேரத்திற்கு புத்துணர்ச்சி தருமே தவிர, நாளடைவில் மறதியை அதிகரிக்கும் என்பதே உண்மை.