புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 10,710 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 ஆயிரத்து 608 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் 29 கொலை வழக்குகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 68 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பந்தப்பட்ட 26 வழக்குகளில் 37 குற்றவாளிகள் கைதானதில், அவர்களிடமிருந்து ரூ.20 லட்சத்து 53 ஆயிரத்து 750 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கால்நடை திருட்டு சம்பந்தமான 29 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான கால்நடைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 431 வழக்குகளில் காணாமல் போன 442 பேர் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 71 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 68 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 59 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக மணல் திருட்டு, லாட்டரி, சூதாட்டம், குட்கா என 1,186 வழக்குகளில் 1,860 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனை செய்ததாக 97 வழக்குகள் பதியப்பட்டு 175 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சுமார் ரூ.17 லட்சத்து 10 ஆயிரத்து 835 மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடிசம் செய்த ரவுடிகள் மீது 76 வழக்குகள் பதியப்பட்டு 91 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அதில் 20 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2022-ம் ஆண்டில் மட்டும் புதிதாக 362 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.