சென்னை : இராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் (வ/27) என்பவர், சென்னையில் தங்கி, வானகரத்தில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வினோத் 09.06.2022 அன்று இரவு உணவு சாப்பிடுவதற்காக, சுமார் 11.00 மணியளவில், வானகரம், சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வினோத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டபோது, வினோத் பணம் தர மறுக்கவே, அந்த 3 நபர்கள் வினோத்தின் கையில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். மேலும் நள்ளிரவு, சுமார் 12.00 மணியளவில், வானகரம், ஜீசஸ் கால்ஸ் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஆதித்யா (வ/25), என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேற்படி 2 சம்பவங்கள் குறித்தும், வினோத் மற்றும் ஆதித்யா ஆகியோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடங்களில் தீவிர விசாரணை செய்தும், இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மற்றும் அடையாளங்களை வைத்தும், மேற்படி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 1) ராஜா (வ/28) காட்டுப்பாக்கம் 2) ரஞ்சித்குமார் (வ/28) காட்டுப்பாக்கம், 3) குமரேசன் (எ) ஆதி (வ/30) காட்டுப்பாக்கம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர் ஆதித்யாவின் 1 செல்போன், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி, பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.