தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 16,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு – இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், பாராட்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், சூரங்குடி, வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் (48) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ராமலெட்சுமி மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. நாகலெட்சுமி ஆகியோர் புலன் விசாரணை செய்து கடந்த (23.10.2019) அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுவாமிநாதன் அவர்கள், (31.07.2023) குற்றவாளியான செல்வம் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 16,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ராமலெட்சுமி மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. நாகலெட்சுமி ஆகியோரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துலெட்சுமி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் முதல் நிலை காவலர் திருமதி. சங்கீதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.