ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அரியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மனைவி காளிமுத்தம்மாள் (93). தென்னந்தோப்பு பம்புசெட் அறையை திறந்து பார்த்தபோது, காளிமுத்தம்மாள் சந்தேகத்திற்கு இடமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். பரமக்குடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன் மற்றும் விரல்ரேகை பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துவக்கினர்.
முதற்கட்ட விசாரணையில், தங்க நகையை கொள்ளையடிப்பதற்காக காளிமுத்தம்மாள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கொலையாளிகளை கைது செய்து நகைகளை மீட்க, பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காளிமுத்தம்மாளின் தென்னந்தோப்பில் வேலை பார்த்த பாண்டியூர் முத்துராக்கு (28), மற்றும் அவரது இரண்டாவது கணவர் மாவிலங்கை வடிவேல் (33), ஆகியோர் என தெரிய வந்தது.
உடனே அவர்கள் இருவரையும் பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணையை துவக்கினார். முத்துராக்குவை சந்திக்க வடிவேல் அடிக்கடி தென்னந்தோப்புக்கு வந்து செல்லும்போது, காளிமுத்தம்மாள் நகை அணிந்திருப்பதை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்
இந்நிலையில், ஏப்.30 ஆம் தேதி காலை 9 மணியளவில் முத்துராக்கு, வடிவேலுவை போன் செய்து வரவழைத்து, மோட்டார் ரூமிற்கு வந்த வடிவேலு, காளிமுத்தம்மாளின் கை மற்றும் கால்களை பிடித்து கொண்டு, முத்துராக்கு மிளகாய்பொடியை வீசி, மூக்கையும், வாயையும் கைகளால் அமுக்கி காளிமுத்தம்மாளை கொலை செய்து, காது மற்றும் கைகளில் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு இருவரும் தப்பி சென்றுவிட்டதாகவும், வடிவேலு தனது சொந்த ஊரான மாவிலங்கைக்கு சென்றுவிட்டார்.
பின்னர், வடிவேலு கொள்ளையடித்த நகைகளை தனது வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்ததை ஒப்புதல் வாக்குமூலம் அளித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தகவல் கிடைத்த 10 மணி நேரத்திற்குள் சிறப்பாக வழக்கை புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகனை, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், வெகுவாக பாராட்டினார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்