சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கஜலட்சுமி, பெ/வ.41, என்பவர் அதிகாலை அவரது வீட்டின் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபொது யமஹா R-15 இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் கஜலட்சுமியின் கழுத்திலிருந்த 3 ½ சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றபோது, கஜலட்சுமி சத்தம் போடவே, சற்று தொலைவில் சுற்றுக் காவல் பணியிலிருந்த T-1 அம்பத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் K.ஶ்ரீதர் (த.கா.36497) குற்றவாளிகளை விரட்டிச் சென்று, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்தபோது, மற்றொரு குற்றவாளி இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றார். பிடிபட்ட குற்றவாளியிடமிருந்து கஜலட்சுமியின் 3 ½ சவரன் தங்கச்சங்கிலி மற்றும் குற்றவாளி வைத்திருந்த 1 கத்தியை பறிமுதல் செய்து T-1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
T-1 அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சூர்யா, 19, செங்குன்றம் என்பதும், தப்பிச் சென்ற குற்றவாளி அவருடைய நண்பர் மதன் என்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் சூர்யா மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தலைமைறைவாகவுள்ள மற்றொரு குற்றவாளி மதனை பிடிக்க காவல் குழுவினர் விரைந்துள்ளனர்.
திறமையாக செயல்பட்டு, குற்றச் சம்பவத்தின்போதே குற்றவாளிகளை துரத்திச் சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து, களவு சொத்தினை மீட்க உதவிய தலைமைக் காவலர் ஶ்ரீதர் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.