கொரோனா தொற்று காலத்தில் மக்களின் பயத்தினை பயன்படுத்தி இணைய லிங்க்குகள் மற்றும் செயலிகள் மூலம் இணையவழி குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளான விரல் ரேகைகள் போன்றவற்றை திருட முயற்சித்து வருகின்றனர்.
அவ்வகையில் அவர்கள் பயன்படுத்தும் மோசடிகளில் ஒன்று இரத்த ஆக்ஸிஜன் அளைவைக் கண்டறிவதாகக் கூறும் போலி ஆக்ஸிமீட்டர் செயலியாகும்.
இணைய குற்றவாளிகளின் தந்திரங்கள்:
உங்களது இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதாகக் கூறும் இணைப்புகளை தங்களுக்கு இணைய குற்றவாளிகள் குறுஞ்செய்தியாக அனுப்புவர். இவ்விணைப்புகள் உங்களை ப்ளே ஸ்டோர் அல்லது மற்ற இணைய பக்கங்களில் இருந்து போலியான ஆக்ஸிமீட்டர் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வழிநடத்தும்.
இச்செயலிகள் தங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவும் போது உங்களது இருப்பிடம்¸ கேலரி¸ குறுஞ்செய்தி¸ தொடர்பு எண் பதிவுகள்¸ கேமரா மற்றும் பிற அனுமதிகளை கேட்கும்.
மொபைல் பயனர் இந்த மேற்சொன்ன அனுமதிகளை வழங்கினால்¸ இணைய குற்றவாளிகள் உங்களது OTP சேமித்த கடவுச்சொற்கள்¸ கிரெடிட் கார்டு விவரங்கள்¸ புகைப்படங்கள்¸ தொடர்பு எண் பதிவுகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளான விரல்ரேகையினை கூட திருட கூடும்.
இவ்வகை செயலிகள் பயனர்களின் இரத்த ஆக்ஸிஜன் அளவை அவர்களின் விரலை கேமராவில் வைப்பதன் மூலமும்¸ டார்ச் லைட்டைப் பயன்படுத்தி விரல்களை ஒளிரச் செய்வதன் மூலமும் அளவிடுவதாக கூறும். அவ்வாறு பயனர் அதனை உபயோகிக்கும் போது இந்த செயலிகள் பயனரின் விரல் ரேகையினை பதிவு செய்துக் கொள்ளும்.
மேலும் இணைய குற்றவாளிகள் உங்களுடைய கைபேசியில் உள்ள கைரேகை ஸ்கேனரில் இருந்து உங்களது பயோமெட்ரிக் விவரங்களை திருடக்கூடும்.
இவ்வாறு பெறப்பட்ட பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் தங்களது வங்கி கணக்குகள் மற்றும் முக்கிய தரவுகளின் தகவல்களை பெற இயலும்.
இணைய குற்றவாளிகள் உங்களது கைரேகை தரவைப் பயன்படுத்தி உங்களது ஆதார் மூலம் இயக்கப்பட்டு வரும் (AEPS) பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
பரிந்துரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
கூகுல் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான மூலங்களிலிருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்யவும்.
செயலிகளை மெபைலில் இன்ஸ்டால் செய்யும் போது அதன் பயன்பாட்டிற்கான அனுமதிகளை மட்டும் அளிக்கவும். அதன் பயன்பாடு தவிர்த்து கூடுதல் அனுமதிகளைக் அச்செயலி கோருவதாக நீங்கள் நினைத்தால் அதன் கோரிக்கையைத் தடுத்திடுங்கள் அல்லது அந்த செயலியை நீக்கிவிடவும்.
செயலியை மொபைலில் இன்ஸ்டால் செய்வதற்கு முன் அச்செயலியை உருவாக்கியவர்கள் பெற்றுள்ள மதிப்பீடுகள் மற்றும் மொத்த பதிவிறக்கங்கள் போன்ற விவரங்களை சரிபார்க்கவும்.
இரத்த ஆக்ஸிஜன் அளவை துல்லியமாக அளவிட SpO2 என்ற சென்சார் தேவைபடும். ஸ்மார்ட் போன்களில் இந்த வகை சென்சார் இல்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே மொபைலில் உள்ள கைவிரல் சென்சார்களைப் பயன்படுத்தி இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதாக கூறும் செயலிகளை பயனர்கள் தவிர்க்க வேண்டும்.
சில செயலி உருவாக்குபவர்கள் மொபைல் கேமரா மற்றும் டார்ச் லைட்டைப் பயன்படுத்தி இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிடும் செயலிகளை உருவாக்க முயற்சித்துள்ளனர். அத்தகைய செயலிகளின் துல்லிய தன்மையானது சந்தேகத்திற்கு உரியது. மேலும் மருத்துவ நிபுணர்கள் குழு அல்லது அரசோ இவ்வகை செயலிகள் குறித்து எந்தவித பரிந்துரையையும் அளிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்களது பயோமெட்ரிக் தரவுகள் வெளிப்பட்டதாக நீங்கள் நினைத்தால் https://resident.uidai.gov.in/bio-lock என்ற வளைதளத்தில் சென்று அனைத்து பயோமெட்ரிக் பரிவர்த்தனைக்கான அங்கீகாரத்தை முடக்கலாம்.
இது போன்று மோசடிகளில் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் பின்வரும் இணையதளத்தில் புகார் அளிக்கவும் https://cybercrime.gov.in/
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா