விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுதுறைகளில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் சுமார் 3 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் கொடுக்கப்பட்டது.
இதனையொட்டி ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். தனிப்படை போலீசார் அவரை வலைவீசி தேடிவந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி, கர்நாடகா மாநிலத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் உச்சநீதிமன்றம் ராஜேந்திரபாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கடந்த 31ம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பினர்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜியிடம் விசாரணை நடத்துவதற்காக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி இன்று பகல் 12 மணிக்கு, ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவரிடம், பண மோசடி தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.