கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுமார் ஆறரை அடி உயரத்தில் முருகப் பெருமானும், சுமார் ஐந்தரை அடி உயரத்தில் வள்ளி பிராட்டியும் கருவறையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். நம்பிராஜனின் மகளாக வளர்ந்த வள்ளி தேவியை கந்தன் காதலித்துத் திருமணம் செய்த நிகழ்வு வேளிமலை திருத்தலத்தில் நிகழ்ந்ததாக பக்தர்கள் நம்புகிறார்கள். வேளிமலையில் வள்ளிச்சுனை, வள்ளி ஒழிந்திருந்த குகை, வள்ளி தினைபுலம் காத்த சோலை உள்ளிட்ட இடங்கள் இன்றும் உள்ளன. தினைபுலம் காத்த வள்ளியைத் தேடி வளையல் விற்கும் கிழவனைப் போன்று வேடமிட்டுச் சென்றிருக்கிறார் குமரன். அப்போது வள்ளியின் தந்தை நம்பிராஜன் அங்கு வரவும் முருகன் வேங்கை மரமாக மாறி நின்றார். அந்த வேங்கை மரத்தின் அடிப்பகுதி எச்சம் மட்டும் இப்போதும் வேளிமலை குமாரசுவாமி கோயிலில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையின் கீழ் இருந்தபோது இக்கோயில் மன்னருக்குப் பிடித்த கோயில்களில் ஒன்றாக இருந்தது. போலீஸார் காவடி பவனிசுதந்திரத்துக்கு முன்பு மக்கள் அமைதியாக வாழ வேண்டி காவல் துறையினரும், நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்க வேண்டி பொதுப்பணித்துறை சார்பிலும் இந்த ஆலயத்துக்குக் காவடி கட்டிச் செல்வது வழக்கம். இதற்காக தக்கலை காவல் நிலைய போலீஸாரும், தக்கலை பொதுப்பணித்துறை அலுவலக அதிகாரிகளும் விரதம் இருந்து, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி கட்டுவார்கள். காவடிகள் காவல் நிலையத்திலும், பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் வைத்து கட்டப்படுவது மரபு. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிறக்கப்பட்டபோது கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பிறகும் இந்த பாரம்பர்யம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தக்கலை காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் விரதமிருந்து குமாரக்கோயில் முருகன் கோயிலுக்குக் காவடி ஏந்திச் சென்று நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டின் கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீசாரும் காவல் துறை அதிகாரிகள் காவடி பவனியுடன் வேளிமலை முருகன் கோயிலுக்குச் சென்றனர். காவடி பூஜையில் கலந்துகொண்ட போலீஸ் அதிகாரிஅதுபோல மழை பெய்யவும் நீர் வளம் செழிக்கவும் விவசாயம் எவ்வித குறையும் இல்லாமல் சிறப்பாக நடைபெறவும் பொதுப்பணி துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து காவடிகட்டி பவனியாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் குமரி மாவட்டத்தின் பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வேளிமலைக்குக் காவடி பவனியாக சென்றனர். கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக காவடி பவனியில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்து சென்றனர். வழக்கமாக அதிக அளவிலான பொதுமக்கள் காவடி பவனி அனுமதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு குறைவான பக்தர்களே காவடிபவனி செல்ல அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வேளிமலை குமரனை வழிபட காவடி கட்டிச் செல்லும் விழா தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத அதிசய நிகழ்வாகும்.