கோவை: கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க புலனாய்வு போலீசார், மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அடங்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பிரிவில் உள்ள ஒவ்வொரு உட்கோட்டத்தையும் மையப்படுத்தி 8 தனிப்படைகள் அமைத்து மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டுள்ளார் – இதன்படி புலனாய்வு பிரிவில் 4 தனிப்படையும் சட்டம் ஒழுங்கு பிரிவில் 4 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனிப்படையிலும் 1 சப்-இன்ஸ்பெக்டர் 4 போலீசார் இருப்பார்கள். இதில் சட்டம் ஒழுங்கு பிரிவு தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனை, மதுபாட்டில்கள், லாட்டரி சீட்டு, விற்பனை போன்றவற்றை தடுக்கும் பணியில் ஈடுபடுவதுடன் அதனை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து சம்பந்தப்பட்ட போலீசில் ஒப்படைப்பார்கள்.
புலனாய்வு பிரிவு தனிப்படை போலீசார் நகை பறிப்பு, பணம் பறிப்பு, வழிப்பறி, திருட்டு, கொள்ளை, போன்ற குற்றங்களை தடுக்க கண்காணிப்பு பணி, விசாரணை பணியை மேற் கொள்வார்கள். இதன் மூலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.