கோடை காலம் தொடங்கி விட்டது, விடுமுறைக்கு ஊருக்குச் செல்வோர் , வீட்டைத் திறந்து வைத்து தூங்குபவர்களை குறிவைத்து அவர்கள் வீட்டில் புகுந்து திருடுவதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது. இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளர்கள்.
பொருள் இழப்பை அளிக்கும் நான்கு வகை முக்கியக் குற்றங்கள்
குற்றப்பிரிவு போலீஸார், திருட்டுகளைப் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். 1.கொடிய குற்றம் ஆதாயக் கொலை. இது பணம் நகைக்காக கொலை செய்து கொள்ளையடிப்பது. 2.வழிப்பறி, இதில் தற்போது செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு வருகிறது. மூன்றாவது குற்றம் வீடுகளில் புகுந்து திருடுவது. இதில் கடைகளும் அடக்கம். நான்காவது கவனத்தை திசை திருப்பி திருடுவது. முதலிரண்டு வகை முக்கிய குற்றங்கள்
முதல் குற்றம் ஆதாயக் கொலை:
சட்டம் ஒழுங்கு சரியாகப் பராமரிக்காதபோது அதிகரிக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆதாயக் கொலைகள் குறைவு.
இரண்டாவது குற்றம், வழிப்பறி
இதில் புதிது புதிதாக இளைஞர்கள் சிறுவர்கள் அதிக அளவில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். இந்த குற்றம் சமீபகாலமாக போலீஸாருக்கு பெரும் சவாலாக உள்ளது. கவனத்தை திசைதிருப்பி திருடுவது
மூன்றாவது குற்றம் கவனத்தை திசைதிருப்பி திருடுவது
இந்தவகை குற்றவாளிகள் குறிப்பிட்ட சிலர் தான் இருப்பார்கள், இரானிய கொள்ளையர்கள் என்ற கூட்டமும் இதில் உண்டு. சிபிஐ அதிகாரி, கஸ்டம்ஸ் அதிகாரி, போலீஸ் அதிகாரி, லஞ்ச ஒழிப்புத்துறை என கவனத்தை திசைதிருப்பி, மிரட்டி பணம் நகைகளை பறித்துச் செல்வார்கள்.
இன்னும் சில இடங்களில் அப்பாவிகளை நகைகளை கழற்றிச் செல்லுங்கள் திருட்டுப்பயம் உள்ளது என்று கூறி பேப்பரில் மடித்து தருவது போல் ஏமாற்றுவார்கள். பணத்தைக் கீழே போட்டுவிட்டு ஆசைகாட்டி நம்மிடம் இருக்கும் பணத்தை பறித்துச்செல்வது, ஒரே நபரை 5-க்கும் மேற்பட்ட நபர்கள் குறிவைத்து சுற்றுப்போட்டு கைப்பை, நகை, செல்போனைப் பறிப்பது போன்றவையும் இதில் வரும். கோடை சீசன் திருட்டு
நான்காவது ரகம் சீசன் திருட்டு
இது கோடைகாலம் வந்தால் ஆரம்பிக்கும் கோடையில் மட்டும் வீடு புகுந்து திருடும் குற்றம் அதிக அளவில் நடக்கும். இதை தடுக்க நாகப்பட்டினம் போலீஸார் பல எச்சரிக்கைகளை தருவார்கள் ஆனால் வழக்கம் போல் பொதுமக்கள் அதை கடை பிடிக்க மாட்டார்கள் இதனால் பொருட்கள் திருட்டு போகும். என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
கோடை காலத்தில் அதிகரிக்கும் திருட்டு
கோடை காலம் ஏப்ரல் மாதம் பாதியில் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். இந்த மாதத்தில் பொதுமக்கள் விடுமுறை மூடுக்கு வந்துவிடுவார்கள். கோடைக்கால திருட்டும் இந்த நேரத்தில் தான் அதிகரிக்கும். பொதுவாக வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது வருடம் முழுதும் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தாலும் கோடையில் அதிகரிக்கும். கோடை திருட்டின் 2 பிரதான காரணங்கள்
இரண்டு காரணங்களால் இவை அதிகமாக நடக்கும். 1. கோடை காலத்தில் குடும்பத்தினர் வீட்டின் ஜன்னல், வாசல் கதவைத் திறந்து வைத்து தூங்குவது, வீட்டைப் பூட்டிவிட்டு மொட்டை மாடியில் குடும்பத்தோடு போய் தூங்குவது. 2. மொத்தமாக கோடை விடுமுறைக்காக ஒரு வாரம், பத்து நாட்கள் சுற்றுலா செல்வது, சொந்த ஊருக்கு சொந்தங்களைப் வீரர் செல்வது. இந்த இரண்டையும் வீடுபுகுந்து திருடும் கொள்ளையர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். போலீஸார் என்னதான் ரோந்துப்பணியில் ஈடுபட்டாலும் திருடன் அதை விடப் புத்திசாலியாக இருப்பான்.
இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
வெளியூர் செல்பவர்கள் என்ன செய்யக்கூடாது?
வெளியூர் செல்பவர்கள் செய்யும் முக்கிய தவறுகளை கொள்ளையர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்கிறார்கள் போலீஸார். ஊருக்கு செல்வதைப்பற்றி பொது இடத்தில் பேசுவது. மளிகைக்கடை, முடிவெட்டும் இடம், அல்லது குற்ற நோக்கத்துடன் செயல்படும் சிலர் நம்மிடையே ஏதோ ஒருவகை தொழில் சார்ந்தவர்களாக இருப்பார்கள் அவர்களை வைத்துக்கொண்டே பேசுவது.
இந்தத் தேதியில் கிளம்புகிறேன், இத்தனை நாட்கள் போகிறேன், இத்தனை நாட்கள் வரமாட்டேன் என்று பொது இடத்தில் கூறும்போது அதை அடுத்தவர்களும் கவனிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஊருக்குச் செல்லும் போது டாக்ஸி அல்லது ஆட்டோவில் செல்லும் போது வீட்டைப் பூட்டி சாவியை எங்கே வைத்தாய், பீரோ சாவியை எங்கே வைத்தாய், நகைப்பெட்டியை பத்திரமாக வைத்தாயா போன்ற சம்பாஷணைகள் ஒருவேலை குற்ற எண்ணம் கொண்ட நபராக இருக்கும் பட்சத்தில் அதுவே அவர்களுக்கு சிறந்த க்ளூவாக மாற வாய்ப்புண்டு.
ஆயிரக்கணக்கில் வேலைப்பாட்டுடன் கதவு அமைக்கும் சிலர் பூட்டு விஷயத்தில் ஆயிரம் யோசித்து கஞ்சத்தனத்துடன் மட்டமான பூட்டை வாங்கிப் பூட்டுவார்கள். திருடர்கள் எத்தகைய பூட்டையும் கள்ளச்சாவி இல்லாமல் டெக்னிக்காக திறக்கும் கலையில் கைதேர்ந்து விட்டார்கள். வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டால் அப்புறம் வீட்டையே மறந்துவிடுவது போன்ற காரணங்களும் திருடர்களுக்கு வசதியாக உள்ளது.
தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
தனியாக வீடுகளில் வசிப்பவர்கள் கூடியவரை வீட்டில் ஆட்கள் இருப்பது போன்று பார்த்துக்கொள்ள வேண்டும். அக்கம் பக்கத்தவருடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஊருக்குப் போகும் போது கவுரவம் பார்க்காமல் அக்கம் பக்கத்தவரிடம் சென்று ‘இத்தனை நாட்கள் வெளியே செல்கிறேன், கொஞ்சம் அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூற வேண்டும். கூடியவரை வெளியூர் செல்வதைக் குறிப்பிட்ட தேவைப்பட்ட சிலரிடம் மட்டுமே கூறவேண்டும். போலீஸார் கூறும் இன்னொரு முக்கியமான விஷயம், தயக்கப்படாமல்.
“அருகிலுள்ள ஸ்டேஷனில் தகவலை சொல்லிவிடுங்கள்.”
போலீஸார் ரோந்து செல்லும்போது எத்தனை பீட் போலீஸார் சென்றாலும் அவர்கள் அந்த வீட்டையும் கவனித்துவிட்டுச் செல்வார்கள். திருடர்கள் எந்த நேரத்தில் பெரும்பாலும் வருவார்கள் என்பதும் போலீஸாருக்குத் தெரியும். ஆகவே குற்றம் நடைபெறாமல் தடுக்க முடியும்.
முக்கியமான விஷயம் நகைகள் அதிகமாக இருந்தால் வெளியூருக்குச் செல்லும் போது அதை அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும், வீட்டில் திருடன் ஏமாறுவான் என்று கட்டிலுக்கடியில், பரண் மீது, மெத்தைக்கடியில், பீரோ மேலே புத்தக அலமாரியில், மசாலா டப்பாவில் நகைகளை வைப்பது, எல்லாம் பழைய டெக்னிக், அதை எல்லாம் தெரிந்து எடுத்துச்சென்ற திருடர்கள் அதிகம் உண்டு.
ஆகவே நகை அதிகம் இருந்தால் வங்கி லாக்கரில் வைக்கலாம், அல்லது தெரிந்த நம்பிக்கையான சொந்தங்கள், நண்பர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்லலாம். வீட்டில் பக்கத்தில் உள்ளவர்களிடம் மாலையில் இரவு விளக்கைப் போட்டு வைக்கச் சொல்லலாம். தெரிந்த நண்பர்கள் உறவினர்களை வீட்டுப் பக்கம் வந்து பார்த்துவிட்டு செல்லச் சொல்லலாம்.
மொட்டை மாடியில் தூங்குபவரா?- இதைக் கவனியுங்கள்
வெயில் காலத்தில் காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்குவதும், மொட்டை மாடியில் சென்று தூங்குவதும் நாமே திருடர்களுக்கு வழி விடுவதற்கு சமானம். மொட்டை மாடிக்குச் செல்லும் போது அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வதாலும், காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கும் போதும் அதிகாலையில் அசந்து தூங்கும் நேரத்தில் திருடர்கள் காரியத்தை முடித்து விடுகின்றனர்.
இதைத் தவிர்க்க மொட்டைமாடியில் படுக்கச் சென்றாலும் வீட்டின் எதாவது ஒரு அறையில் விளக்கைப் போட்டுவிட்டு செல்லும்போது ஆள் இருக்கிறார்கள் என்று திருடர்கள் வரத் தயங்குவார்கள். வீட்டில் உள்ள ஒருவராவது வீட்டில் தூங்க வேண்டும். காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
இரும்பு கிரில் கதவைப் பூட்டு போட்டு பூட்டிவிட்டு கதவைத் திறந்துவைத்து தூங்குகிறோம் பாதுகாப்பு என்று நினைப்பது தவறு. பூட்டை உடைத்துவிட்டால் இரும்பு கிரில் கதவை திறப்பது பிரச்சினையே இல்லாத விஷயம்.
கண்காணிப்பு கேமரா அவசியம்
முக்கியமாக நல்ல பூட்டுகளை கொண்டு வீட்டை பூட்டிவிட்டுச் செல்வது நல்லது. அனைத்திற்கும் மேலாக போலீஸார் குறிப்பிடுவது ஒரு அபார்ட்மென்ட்டிலோ, குடித்தனப் பகுதியிலோ வசிப்பவர்கள் கூட்டுசேர்ந்து கண்காணிப்பு கேமராக்களை நிறுவலாம். கண்காணிப்பு கேமரா இருந்தாலே பாதி திருடர்கள் வர யோசிப்பார்கள். கண்காணிப்பு கேமராக்கள் தற்போது 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை விலைக்கு கிடைக்கின்றன.
கண்காணிப்பு கேமராக்கள், வீட்டில் நாய் இருப்பது, குடியிருப்பு என்றால் செக்யூரிட்டி இருப்பது என்றுமே பாதுகாப்பான வாழ்க்கைக்கு நல்லது. பாதுகாப்பான கோடையை சந்தோஷமாகக் செலவிடுங்கள் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.