சென்னை : சென்னை வேளச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக தமிழக டி.ஜி.பி, திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் மனு ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகார் மனுவின் அடிப்படையில் டிஜிபி அலுவகத்திலிருந்து அடையார் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் புகாருக்குள்ளான பள்ளி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிக்கு வெளி பகுதியில் தினமும் விலை உயர்ந்த கேடிஎம் பைக்கில் 3 இளைஞர்கள் வந்து பள்ளி மாணவர்களிடம் பேசுவதுபோல் மாத்திரையை விற்பனை செய்து வந்துள்ளனர்.
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும்போது 3 இளைஞர்களையும் கையும் களவுமாக பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் சட்டை பாக்கெட் மற்றும் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்தபோது போதை மாத்திரைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் 3 பேரையும் வேளச்சேரி காவல் நிலையத்தில் மதுவிலக்கு போலீசார் ஒப்படைத்தனர். வேளச்சேரி போலீசார் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் வேளச்சேரி TNHB காலனியைச் சேர்ந்த (23), முனிஸ்வரன், நேரு நகரைச் சேர்ந்த (21), விகனேஷ்வரன், மற்றும் பெருங்குடி கள்ளுக்குட்டை பகுதியை சேர்ந்த (19), ஜோஸ்வா என தெரியவந்தது.
வாரத்தின் சனிக்கிழமை இரவு அவர்கள் வைத்திருக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று ஆந்திராவிற்கு சென்று மாத்திரைகளை வாங்கி வந்ததாகவும், சில நேரங்களில் ரயில் மூலம் மும்பை சென்று போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறினர்.பின்னர் அவர்களிடமிருந்து 330 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள் மற்றும் ஒரு விலை உயர்ந்த KTM பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அதை தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.