திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் குறுக்கு சாலையில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. நண்பகல் உச்சி வெயில் நேரத்தில் இந்த குப்பை கழிவுகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் குப்பை கழிவுகளில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்து வானுயர கருப்புகை சூழ்ந்து காணப்படுகிறது. கருப்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். கரும்பு புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிவதால் சாலையில் செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாகவும், கண் எரிச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், தொழிற்சாலை வேதிக்கழிவுகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற கழிவுகளை கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கரும்புகை மண்டலத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. குப்பை கழிவுகளை தீ வைத்து எரிக்கும் சமூக விரோதிகள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு