சென்னை: சோழிங்கநல்லூர், பொன்னியம்மன் கோயில், அம்மா உணவகம் அருகில் ஒரு ஆண் நபர் இரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், J10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இறந்த நபர் கணேசன், (வ/49) சோழிங்கநல்லூர் என்பதும், சற்று முன்பு அவருக்கு தெரிந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநருடன் மது அருந்தியபோது, வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து, கணேசனுடன் மது அருந்திவிட்டு தலைமறைவாக சென்ற ராஜா (எ) ராஜு, (வ/38) காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், ராஜா (எ) ராஜு சென்னையில் தங்கி, வாடகைக்கு ஷேர் ஆட்டோ ஓட்டி வருவதும், கணேசனுடன் 24.6.2021 அன்று மாலை மேற்படி சம்பவ இடத்தில் மது அருந்தியதும், அப்பொழுது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, ராஜா தான் வைத்திருந்த சிறிய கத்தியால் கணேசனை தாக்கிவிட்டு அவரது ஷேர் ஆட்டோவில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
அதன்பேரில், ராஜா (எ) ராஜு கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய 1 கத்தி மற்றும் 1 ஆட்டோ கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி ராஜா மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.