மதுரை : சோழவந்தான் அருகே குடிநீர் மற்றும் பேருந்து வசதி கேட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் மாவட்ட ஆட்சியர் நடவக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நாச்சிகுளம் ஊராட்சியில்,மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்ல பெரிய குழாய்கள் பதித்து வருகிறார்கள். இதனால் ,ரோடு ஓரங்களில் சுமார் 6 அடி முதல் எட்டடி வரை பள்ளம் தோண்டி வேலை நடந்து வருகிறது. சுமார் ஒரு மாத காலமாக இந்த குடிநீர் குழாய் பதிக்கும் வேலைகள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்தை துண்டித்து, மெயின் ரோட்டில் நடந்து வருகிறது . வேலை நடந்து வரும் பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு மின் வயர்கள் சேதப்படுத்தி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இப்பகுதி கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு பல இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் . கடந்த வாரம் ஊராட்சி மன்ற த்தலைவர் சுகுமாரன் இந்த குழாய் பதிக்கும் ஒப்பந்தாரரிடம் விரைவில் முடித்து சேதப்படுத்திய குடிநீர் குழாய்களை சீர் செய்து கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். இதற்கு அவர்களும் விரைவில் சரி செய்து வேலைகளை முடித்து தருவதாக கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், ஒரு வாரத்திற்கு மேலாகியும் குடிநீர் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்படவில்லை . வேலையும் முடியவில்லையென தெரிகிறது.
பொறுமை இழந்த கிராம பொதுமக்கள், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடிநீர் குழாய் சரி செய்து உடனடியாக கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும், குழாய் பதிப்பதால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்தை சரி செய்து பேருந்துகள் கிராமத்திற்கு வருவதற்கு வழி செய்ய வேண்டும் என, குழாய்கள் பதிக்கும் இயந்திரங்களை மறித்து, சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்துபோராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் காலி குடங்களுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து, கிராம ஆதிதிராவிட பள்ளி மேலாண்மை குழுவைச் சேர்ந்த ரேணுகாதேவி கூறும் பொழுது இக்கிரமத்தில், பத்து நாட்களுக்கு முன்பாக மாநகராட்சி குடிநீர் பைப் வேலை செய்வதாக மிக ஆழமாக பள்ளம் தோன்றியதால், எங்களது குடிநீர் பைப்புகள் உடைக்கப்பட்டு, குடிநீர் கிடைக்காமல் ஒரு வாரத்திற்கு மேலாக அல்லல்படுகிறோம். அதுமட்டும் இல்லாது, மின்சார வசதி துண்டிக்கப்பட்டு பல இடங்களில் மின் வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். இதுபோக இங்கே ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து இங்கு வரவேண்டும், இங்கு வருவதற்கு பஸ் வசதி இல்லாமல் சுமார் 5 முதல் 8 கிலோமீட்டர் நடந்து வருவதால், அவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ஆகையால், இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட குடிநீர் குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரர்களிடம் பேசியும் இதுவரை பணியை முடித்து கொடுக்கவில்லை. ஆகையால், நாங்கள் இன்று அவர்கள், வேலை செய்யக்கூடிய இடத்தில் வேலை செய்வதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.என்று தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி