மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் காலனி அருகே வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் ஆனது வைகை ஆற்றின் கரையோரப் பகுதியில் செல்லும் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி அருகில் உள்ள வயல் வெளிகளில் தேங்கி நிற்கிறது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் குடிநீர் குழாயின் உடைப்பை சரி செய்யாததால், தற்போது, வயல்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசக்கூடிய நிலையில் உள்ளது.
மேலும், அருகில் உள்ள தென்னந்தோப்பு பகுதிகளில் தண்ணீர் பல நாட்கள் தேங்கிக் இருப்பதால் தென்னை மரத்தின் வேர்கள் அழுகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது, வெப்ப அலை வீசி வரும் நிலையில் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதால், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி