ஒட்டிய வயிறே உறவாக ஏமாற்றம் மட்டுமே உணவாக சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை மதிய உணவுக்காக பள்ளி சென்றவர்.
அரசு கொடுத்த சீருடை மட்டுமே உடுத்தியவர் ஒதுங்க ஒரு குடிசை என வறுமையின் பிடியில் சிக்கி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி அகரம் சித்தாமூர் மற்றும் அரசினர் மேல்நிலை பள்ளி அனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்து திறமை இருந்தும் வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் இல்லாத காரணத்தினால் 12ஆம் வகுப்பில் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றாலும் அலைந்து திரிந்து கடன் வாங்கி முதல் தலைமுறை பட்டதாரியாக பொறியியல் பட்டம் படித்து முடித்தார்.
வறுமையின் பிடியில் சிக்கி இருந்ததால் கோயம்பேடு அருகே அமைந்தகரை மார்க்கெட்டில் 50 ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்து சமுதாயத்தை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு வேலையே அச்சாணி என்ற நோக்கத்துடன் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்தவர்.
நான்கு ரூபாய் இட்லி வாங்க காசில்லாமல் போட்டித் தேர்வுகளுக்கு பசியுடன் படித்தவர் ஏழை மற்றும் கிராமத்து இளைஞரான இவர் எந்த விழிப்புணர்வும் வாய்ப்பு கிடைக்காமல் பன்னிரெண்டாம் வகுப்பில் 850 மதிப்பெண் பெற்றவராக இருந்தாலும் 5 லட்சம் பேர் போட்டியிட்ட குரூப் 1 தேர்வில் தமிழில் எழுதி (PSTM அல்ல) சிறந்த மதிப்பெண்ணை பெற்று காவல் துணை கண்காணிப்பாளராக தேர்வு பெற்றிருக்கும் அகரம் சித்தாமூர் என்ற கிராமத்தில் வசிக்கும் குடிசை வீட்டு நாயகன் மதிப்பிற்குரிய திரு.சத்தியராஜ் கலியமூர்த்தி அவர்கள் கிராமத்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை கற்றுத்தர உறுதுணையாக இருக்கிறார் மேலும் போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கலங்கரை விளக்கமாய் வழிகாட்டி வருகிறார்.
குடிசை வீட்டில் பிறந்தாலும் விடாமுயற்சி எழுதிய வியர்வைக்கவிதை கடின உழைப்பால் காக்கிச்சட்டையினை கைப்பற்றிய காவியநாயகன் ஒப்பற்ற அறிவாலும் தப்பற்ற பண்பாலும் சமூகத்துக்கே சான்றாக நிற்பவர்.