மதுரை : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கு, மேலவெளி, க.எண்.12/165-ஐ சேர்ந்த காளிமுத்து மகன் குணசேகரன் என்பவர் மனித உயிருக்கு ஊறு விளைவித்து சமூகத்தைச் சீரழிக்கும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளி ஆவார். மேற்படி குற்றவாளி மீது மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருச்சி, துாத்துக்குடி, சென்னை மற்றும் போதை பொருட்கள் தடுப்புப் பிரிவு ஆகிய இடங்களில் 10-க்கும் மேற்பட்ட கமர்ஷியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையிலும், சில வழக்குகள் நிலுவையிலும் உள்ளது. இவர் தழிழ்நாடு மற்றும் பிற அயல் மாநிலங்களுக்கும் இலங்கை உட்பட சில அயல்நாடுகளுக்கும் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். மேலும் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த (21.06.2022)-ம் தேதி அன்று மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீதிமன்றத்திற்கு பின்புறமுள்ள சாலை அருகே சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 1000 கிலோ கிராம் கஞ்சாவை TN 58 BE 9288 (Ashok Leyland Dosth) 6760m வாகனத்தில் கடத்தி வந்த குற்றவாளிகளை கைதுசெய்து அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான குணசேகரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு தற்சமயம் புதுக்கோட்டை மத்திய சிறையில் நீதிமன்ற அடைப்புக்காவலில் உள்ளார்.
கடந்த (22.12.2018) அன்று கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்படி குணசேகரன் என்பவர் மீது உசிலம்பட்டி உட்கோட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் குற்ற எண்.298/2018 பிரிவு 8 C r/w 20 B (2) (c) & 29 (1) NDPS Act- ன் படி வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. மேற்படி வழக்கில் EC & NDPS சிறப்பு நீதிமன்றம் மூலம் பிணையம் பெற்றிருந்தார். இந்நிலையில் பிணையத்தில் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைகளை மீறியதற்காகவும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காகவும், மேற்படி நபரின் பிணையத்தை முறிவு செய்ய வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி மனுவின் மீதான விசாரணையில் குற்றவாளி குணசேகரனுக்கு வழங்கப்பட்டிருந்த பிணையத்தை முறிவு செய்து மாண்புமிகு அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் மயக்க மருந்துபொருட்கள் மற்றும் மனநிலைக்கு ஊறு செய்யும் பொருட்கள் சட்டம் 1985 தொடர்பான விசாரனை மேற்கொள்ளும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இனி வரும் காலங்களில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படுவதோடு குற்றவாளிகளுக்கெதிராக அனைத்துவிதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்