திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதே ஊராட்சியில் மங்கோடு கிராமத்தில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மீனவ கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ரெட்டிப்பாளையம் கிராம மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்தில் வேறு கிராமத்தை குடியமர்த்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் வேறு கிராம மக்களை தங்களது கிராமத்தில் குடியமர்த்தி பட்டா வழங்குவதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது நடைபெற்ற கணக்கெடுப்பின் போது ஏற்கனவே உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மறுகுடியமர்வு செய்வது குறித்து பரிசீலிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக சார் ஆட்சியர் தெரிவித்தார். மேலும் வீட்டுமனை பட்டா தொடர்பாக பயனாளிகள் பட்டியலை அளித்திடுமாறும், அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் களைந்து சென்றனர். இதனால் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு