மதுரை : பேரையூர் அருகே உள்ளது பி.ஆண்டிபட்டி. இந்த கிராமத்தில், சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். பேரையூர் பெரிய கண்மாய் அருகில் உள்ள இந்த கிராமத்துக்கு டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில் கண்மாய் மேல் அமைத்துள்ள சாலையில்தான் செல்லவேண்டும். இந்த சாலை அமைத்து நான்கு வருடங்கள் ஆகிறது. தற்போது சாலை குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைபர் கேபிள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட மண், சாலையில் கொட்டப்பட்டதால் மழைக்கு சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது.
இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர். மறியல் இந்நிலையில் காலை கிராமத்தில், உள்ள அனைத்து பொதுமக்களும் பேரையூர், டி.கல்லுப்பட்டி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா, டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசங்கர நாராயணன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர், கூறியதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி