திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஆரணியாற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ஆற்றங்கரையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களிலும், ஊருக்குள் வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்து மக்கள் தவிப்புக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் ஆரணியாற்றில் வெள்ள தடுப்பு சுவர் மற்றும் ஆங்காங்கே மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழவேற்காடு அருகே ஆண்டார்மடம் கிராமத்தில் ஆரணியாற்றில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வெள்ளத்தடுப்பு சுவரில் தற்போதே ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மழை காலத்தில் வெள்ளப்பெருக்கின் போது இந்த சுவர் எப்படி ஊருக்குள் வெள்ளம் புகாமல் பாதுகாக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு