சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்! குற்றங்கள் குறைய வேண்டுமானால் காவல்துறை மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்! பொதுமக்கள் காவல்துறையிடமும், காவல்துறை பொதுமக்களிடமும் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் மக்கள் உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது காவலர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 6ம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நாளில் கடமை, கண்ணியத்தை பின்பற்றி செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காட்சி நடத்தப்படும். காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும். மேலும் ரத்த தான முகாம்கள் நடத்தப்படும் என்றார்.
தமிழக அமைச்சர்கள் அவரவர் துறையில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட அப்படிச் செயல்பட முக்கியக் காரணம் மாநிலத்தின் அமைதி. அதை எனது தலைமையின் கீழ் இருக்கும் காவல்துறைதான் உறுதி செய்கிறது. அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளரும், தொழிற்சாலைகள் வரும், கல்வி மேம்படும், உற்பத்தி அதிகரிக்கும், சுற்றுலா பயணிகள் வருவார்கள். தமிழகத்தின் அமைதிக் காரணம் எனது துறையான காவல்துறைதான். சட்டம் – ஒழுங்கை முறையாகப் பேணி இந்த சாதனையைப் படைக்க துணையாக இருந்த காவல்துறையினர் அனைவருக்கும் நானும், நீங்களும், தமிழக மக்களும் நன்றிக்குரியவர்கள்.
சட்டம் – ஒழுங்கு சீராக இருப்பதால் தான் தமிழகத்தில் கலவரங்கள் இல்லை. கலவரங்களைத் தூண்ட யாரேனும் நினைத்தாலும் மக்களே அதை முறியடித்துவிடுவார்கள். மொத்தத்தில் சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண் தான் விழுந்திருக்கிறது. குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஏதாவது ஒரு சில இடத்தில் கவனக்குறைவால் சில தவறுகள் நடந்தால், அதை சுட்டிக்காட்டும் பட்சத்தில் சரி செய்து கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். உள்நோக்கத்தோடு, அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது, மணிப்பூர் அல்ல, காஷ்மீர் அல்ல, உத்தரப் பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை, இது, தமிழ்நாடு அதை மறந்துவிடாதீர்கள் என கூறியுள்ளார்.