சிவகங்கை : சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அசம்பாவிதங்கள், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், பொது மக்களுக்கு காவல் துறையின் மீது உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டதை அடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் பொன்ரகு தலைமையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு அண்ணாசிலை, பேருந்து நிலையம், நான்குரோடு, புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் திருப்பத்தூர் நகர் காவல் நிலையம் சென்றடைந்தது. இதில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் நிலையத்திலிருந்து ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள், அதிரடிப்படை போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை