திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 19 லட்சம் மதிப்புள்ள 164 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சீமைசாமி, அவர்கள், தலைமையிலான சைபர்கிரைம் போலீஸார், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் திரு. ராஜதுரை, உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம், முதல் நிலை காவலர்கள் திரு.சுரேஷ், திரு. செல்லத்துரை, காவலர்கள் திரு.ராஜமனோஜ், திரு. திவாகர், திரு.ரஞ்சித் ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் காவல்துறையினர் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு ரூபாய் 6 லட்சத்தி 7ஆயிரத்து 800 மதிப்புள்ள 50 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, அந்தந்த காவல் நிலைய காவலர்களிடம் இன்று (02.06.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் ஒப்படைத்தார்கள்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் வெளியே வர முடியாத காரணத்தினால் காவல்நிலைய காவலர்கள் மூலம் செல்போன்கள் நேரடியாக அவர்கள் வீட்டிற்கே சென்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சீமைசாமி, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு ராஜதுரை, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
இதுவரை சைபர்கிரைம் காவல்துறையினர் மூலம் 25 லட்சத்து 19 ஆயிரத்து 75 ரூபாய் மதிப்புள்ள 214 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.