திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர் திரு.C. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள், தலைமையில் திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, வழக்குகளை விரைந்து முடிக்கவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் பிடியானை நிலுவையில் உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் உத்தரவிட்டார். மேலும் போக்குவரத்து விதிகளை உரிய முறையில் செயல்படுத்தி சாலை விபத்துக்களினால் ஏற்படும் இறப்புகளை தடுக்கவும்,பொது அமைதியை சீர்குலைக்கும் போக்கிரிகள் மீதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மற்றும் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், களவு மற்றும் திருட்டு குற்றங்களை தடுக்க, குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிந்து ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதோடு, கண்காணிப்பு கேமராக்களை நிறுவி தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுரைவழங்கினார்.
பின்னர் திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 14 பேருக்கு தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கினார்.
மேற்படி ஆய்வு கூட்டத்தில் திருநெல்வேலி காவல் ஆணையாளர் திரு.அ.த.துரைகுமார். இ.கா.ப, திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு.பிரவேஷ்குமார். இ.கா.ப ., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், இ.கா.ப., தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R. கிருஷ்ணராஜ் இ.கா.ப ., கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பத்ரிநாராயணன், இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.