அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் பினா, மலர்,ரோஸ் ( ஓய்வு பெற்றது) மற்றும் 2 புதிதாக சேர்க்கப்பட்ட (மோனா மற்றும் சீமா) காவல்துறை மோப்ப நாய்கள் உள்ளன.
இதில் பினா என்ற துப்பறியும் நாய் வெடிப்பொருள் கண்டறியும் பணியில், விஐபி மற்றும் விவிஐபி-க்களுக்கு பாதுகாப்பு பணி கடந்த 9 வருடங்களாக அரியலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணிக்கு சென்று வந்துள்ளது.
இந்நிலையில் பினா கடந்த சில மாதங்களுக்கு முன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பினா-க்கு ஒரத்தநாடு அரசு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவ கண்காணிப்புக்கு கீழ் இருந்து வந்த நிலையில் 22.01.2025 இன்று மதியம் பினா துரதிஷ்டவசமாக உயிரிழந்தது.
இந்நிலையில் இன்று மாலை இறந்த பினா உடலை மோப்பநாய் பிரிவு அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் மாலை அணிவித்து 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.அருள் முருகன் (ஆயுதப்படை), அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் ( ஆயுதப்படை பொறுப்பு), ஆகியோர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் மோப்ப நாயுடன் பணிபுரிந்த காவலர்கள், தலைமை காவலர் திரு,செல்வகுமார், முதல்நிலை காவலர் திரு.விக்னேஷ், காவலர் திரு.கார்த்திகேயன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வின் போது அரியலூர் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.அகமது உசேன் மற்றும் திரு.ஜெகன் குமார் (மோப்பநாய் பிரிவு பொறுப்பு), தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.மணிகண்டன் மற்றும் திரு.அற்புதராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.