திருவள்ளுர் : இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் ஆகியோர் தலைமையில் இன்று (19.07.2021) நடைபெற்றது.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநிலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் திருக்கோயில்களில் திருவிழாக்கள் பூஜைகள், யாகங்கள் உள்ளிட்ட உற்சவகங்கள் நடத்துவதற்கான தடை 30.07.2021 வரை நீடிக்கிறது. எனவே, திருக்கோயில்களில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு, அர்ச்சனைகள், பூ, மாலைகள் உள்ளிட்டவைகள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. 30.07.2021–க்கு பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான கூட்டத்தில் அறிவிக்கப்படும் தளர்வுகளை பொறுத்து முடிவு செய்யப்படும்.
பக்தர்களின் தரிசனத்திற்காக திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு அடிப்பபடை வசதிகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக சுகாதாரத்தை பேணுவதற்காக தற்காலிக கழிப்பிடங்கள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறை தேவையான பங்களிப்பினை வழங்கும். சுத்திகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் முககவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் உள்ளிட்டவைகள் வழங்க தயாராக உள்ளது. பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயிலில் குடிநீரின் அளவு அதிகமாக தேவைப்படும் சூழல் உள்ளது. அதேபோல ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பவானியம்மன் திருக்கோயிலில் 14 வாரங்கள் நடைபெறும் திருவிழாவில் 1, 3, 5, 7 மற்றும் 9 வாரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே, பக்தர்களின் வருகையின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். எனவே, காவல்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, போக்குவரத்து, மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் வாயிலாக குழுக்கள் அமைத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகையை சீர்படுத்தி வரிசையாக தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை சார்பாக, கூடுதலாக காவலர்களை பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தவும், போக்குவரத்தினை சீர்செய்யவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருத்தணி பொறுத்தவரை பக்தர்களின் கோரிக்கையாக தெப்பகுளத்தில் சாமி நீராடி விட்டு மேலே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில் அதற்கான சாத்தியக்கூறுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கலந்தாலோசித்த பின் கொரோனா நோய்க் காலத்தில் அதிகளவு கூட்டம் சேராமல் தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30.07.2021–க்கு பின்னர் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்திய உள்ள நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறையும் பட்சத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று 27.07.2021, 28.07.2021 மற்றும் 29.07.2021 ஆகிய நாட்களில் படிப்படியாக தொற்று குறைந்த பின் 30.07.2021 அன்று அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்;கு அமல்படுத்தி பக்தர்களின் சாமி தரிசனம் செய்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கோரிக்கை வைக்கப்படும். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலர்கள் ஒருங்கிணைத்து உரிய முறையில் நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கூறினார்.
இவ்வாய்வுக்கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளுர்), திரு.ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), திரு.எஸ்.சுதர்சனம் (மாதவரம்), திரு.ச.சந்திரன் (திருத்தணி), திரு..டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), திரு.க.கணபதி (மதுரவாயல்), திரு.ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி.கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மீனா பிரியதர்ஷினி, இணை ஆணையர் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திரு.பரஞ்சோதி உதவி ஆணையர் திரு.சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை