திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும், மேலும் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடந்த 05.10.2021-ம் தேதி முதல் 17.10.2021 வரை காவல் பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கான நினைவு நாளை (21.10.2021) முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் Say No To Drugs என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியை ஆன்லைன் மூலம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை நடத்தியது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தாங்கள் வரைந்த ஓவியத்தை நேரடியாகவும், tvmpolice01@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி ஓவியப் போட்டியில் பங்கு கொண்டனர்.
இப்போட்டி முறையே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஒரு பிரிவாகவும் என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டு,
ஓவிய வல்லுநர்களைக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் முறையே ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் பரிசு மற்றும் 3 ஆறுதல் பரிசுகளும் என மொத்தமாக நான்கு பிரிவுகளில் 24 மாணவ மாணவிகளின் ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இன்று 24.10.2021-ம் தேதி ஓவியப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழும், ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
மேலும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் பயன்படுத்துவதின் அவசியம் குறித்தும் போதை பொருள் பயன்படுத்துவதை தடுப்பதில் பெற்றோரின் பங்கு குறித்தும் விளக்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்