சென்னை: சென்னை, எழும்பூரில் அமைந்திருக்கும் காவல்துறை அருங்காட்சியகத்தை, 16.10.2021 அன்று பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், காவல்துறையினர் மீது தனி ஈர்ப்பும், பிரமிப்பும் தனக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
“காவல்துறை அருங்காட்சியகம் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அதில் என்ன இருக்கும் என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
நானும் காக்கி சட்டை குடும்பத்திலிருந்து வந்தவன்தான். எனது அப்பா சிறைத்துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். ஆகையால், அந்தத் துறை மீது தனி ஈர்ப்பும், பிரமிப்பும் உண்டு.
நமது ஊரில் காவல்துறை தொடங்கப்பட்டதிலிருந்து, எப்படியெல்லாம் வளர்ந்துள்ளது என்பதைப் பொருட்களாக இங்கு முழுமையாக பார்வைக்கு வைத்துள்ளார்கள். அதைத் தாண்டி அனைத்தையுமே பார்க்க வருபவர்களுக்கு காவல் ஆளிநர்கள் விளக்கி கூறுகிறார்கள்.
அதுதான் மிகவும் பிடித்திருந்தது. நமக்குத் தெரிந்த விஷயமாக இருந்தாலும், அதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
காவல்துறை அதிகாரியாக நினைப்பவர்கள் உள்ளிட்ட அனைவருமே இந்தக் காவல்துறை அருங்காட்சியகத்தை வந்து பார்க்க வேண்டும். காவல்துறை அதிகாரியாக வேண்டுமென்றால் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் விவரிக்கிறார்கள்.
இதை நீங்கள் வந்து பார்த்தால், இதன் பாரம்பரியம் என்னவென்று தெரியும். பேரிடர் காலத்தில் என்னவெல்லாம் செய்கிறார்கள்,
வழக்கமான பணிகள் என்ன என அனைத்தையுமே தெரிந்து கொள்ளலாம்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் தனது பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.
