நெல்லை மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்காக வந்திருந்த தமிழக காவல்துறை இயக்குநர் திரு. சைலேந்திர பாபு, நகர்ப்புறப் பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகனத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அத்துடன், நெல்லை ஆயுதப்படை வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்து வைத்தார். நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாகக் கட்டப்படும் அலுவலகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி சைலேந்திர பாபு, ”தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புறப் பகுதிகளில் கூடுதலாக ரோந்துப் பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக புதிதாக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறையின் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காக 69 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அந்த வாகனங்கள் மூலம் செயின் பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றைத் தடுக்க முடியும் என நம்புகிறோம். இந்தப் பணிக்காக கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் இந்த ஆண்டு தமிழக முழுவதும் 23 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். கஞ்சா விற்பனை தொடர்பாக 9,207 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 12,635 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4,003 பேரின் சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளோம். கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட 2,384 வாகனங்களையும் தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்திருக்கிறோம். நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3,967 ரௌடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக பகுதியில் சாதியரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளைத் தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். குற்றவாளிகளைக் கைதுசெய்ய செல்லும் போலீஸார் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அதனால் குற்றவாளிகள் தாக்குதல் நடத்தினால்… அவர்களுக்கு எதிராகத் துப்பாக்கியைப் பயன்படுத்தவும் போலீஸார் தயங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது” என்று சைலேந்திர பாபு தெரிவித்தார்.