சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் தலைமையில், சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்களில் நடைபெற்றது.
இம்முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமிருந்து 1,359 மனுக்களை பெற்றார். காவல் ஆணையாளர் அவர்கள் மாலை 3.00 மணி முதல் இரவு 10.30 மணிவரை தொடர்ந்து 7 ½ மணி நேரம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
இம்முகாமில் பணி இடமாறுதல், தண்டனைக்குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் உள்ளிட்ட 1,359 மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இன்று (03.10.2021) காலை இராஜரத்தினம் விளையாட்டரங்கில், 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்ற “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. அவர்கள் கலந்து கொண்டு, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 195 மனுக்களை பெற்று, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
காவல் ஆணையாளர் அவர்கள் காலை 11.30 மணி முதல் மதியம் 03.30 மணி வரை என 4 மணி நேரங்கள் தொடர்ந்து காவல் ஆளிநர்களிடமிருந்து மனுக்களை பெற்றுள்ளார்.
“உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 2 நாட்கள் நடைபெற்ற காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து மொத்தம் 1,554 மனுக்கள் பெற்றுள்ளார்.
இம்முகாமில், கூடுதல் ஆணையாளர் முனைவர் திரு.J.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் திரு.L.பாலாஜிசரவணன், (தலைமையிடம்), திரு.K.சௌந்தராஜன் (ஆயுதப்படை), திரு.R.ரவிச்சந்திரன் (ஆயுதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
