விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காவலரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சி வருவாய் உதவியாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
சிவகாசியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். திருத்தங்கல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
புது வீடு கட்டியதால் அதற்கு தீர்வை ரசீது கோரி சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ரசீது வழங்குவதற்கு நகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயன் (43) என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத காவலர் ஜாபர் சாதிக் இதுபற்றி விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவலர் ஜாபர் சாதிக்கிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது வருவாய் உதவியாளர் கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் அவர் லஞ்சமாகப் பெற்ற ரூ.10 ஆயிரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.