ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் சபரிபாலசங்கர் (42) இவருடைய காரை யாரோ திருடி சென்றுவிட்டார்கள். சபரிபாலசங்கர் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் காரை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார்கள். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே திருடப்பட்ட கார் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் கார்த்தி (28) என்பவர் வீட்டில் நின்றிருந்த சபரிபாலசங்கரின் காரை மீட்டார்கள். கார்த்தியிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் கார்த்தியும், அவருடைய நண்பர் பிரகாஷ் (27) இருவரும் சேர்ந்து, காரை திருடியதை ஒப்புக்கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தார்கள்.