மதுரை: திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் எதிரெதிர் திசையில் வந்த காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ,காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து, கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மதுரை மாவட்டம், விரகனூர் ஊராட்சி நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (34). கண்டைனர் லாரி ஓட்டுனரான இவர், மதுரையிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில், கள்ளிக்குடி மையிட்டான்பட்டி விலக்கு அருகே கண்டெய்னர் லாரியில் சென்று கொண்டிருந்தபோது, கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர் பாரத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ,சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி பறந்து சென்று எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் காரில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் மேக்காடு அருகே தெங்கன்குளிவிளையைச் சேர்ந்த சாம்டேவிட்சன், மார்ட்டின், கமலநேசன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில், நடைபெற்ற இந்த விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர் தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்தவர்கள் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால், இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையில் தடுப்பை தாண்டி கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி