திருவண்ணாமலை : நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக திருவண்ணாமலை நகரத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் திரு.எஸ்.அரவிந்த் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் திருமண மண்டபம் மற்றும் மடத்தின் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா தொற்று பரவல் இல்லாமல் கார்த்திகை தீபத் திருவிழா நடை பெறுவதற்கு ஏதுவாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் தீபத்திருவிழா நாளுக்கு முன் மூன்று நாட்களுக்கு எந்தவித நிகழ்ச்சிகளும் வெளியூர் நபர்கள் தங்குவதற்கு அனுமதியும் அளிக்கக்கூடாது என்றும் அடுத்து நான்கு நாட்களில் பதிவு செய்தோர் விவரங்களை காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
திருமண மண்டப உரிமையாளர்கள் தரப்பில் வரும் 27.11.2020 ஆம் தேதி வரை சுபமுகூர்த்தம் இருப்பதால் அன்று மாலை வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர். கொரோனா பரவல், 144 தடை உத்தரவு மற்றும் கார்த்திகை தீபம் நாளில் அதிக அளவில் மக்கள் சேர்ந்து கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதையும் கருத்தில் கொண்டு திருமண மண்டபம், மடம் மற்றும் தங்கும் விடுதியில் 27.11.2020 அன்று காலை வரை நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரவு 12.00மணி வரை தங்கிக் கொள்ள அனுமதித்தும், இரவு 12.00 மணிக்குமேல் வெளியூர் நபர்கள் அனைவரையும் மடம், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி விட்டு வெளியேறிவிட வேண்டும் எனவும் 28.11.2020 மற்றும் 29.11.2020 ஆகிய இருநாட்கள் எவ்வித நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும் அன்னதானத்திற்க்காக உணவு சமைக்கவும், வழங்கவும், உணவு பொருட்களை வெளியிலிருந்து பெறவும் தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்