சிவகங்கை : காரைக்குடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக தொடர் வழிப்பறியில் மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்த 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர் திருட்டு மற்றும் வழிப்பறிகள் அரங்கேறி வந்தன. இதையடுத்து சிவகங்கை எஸ்.பி.ரோகித்நாதன் உத்தரவின் பேரில் காரைக்குடி டி.எஸ்.பி.,அருண் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமகாலிங்கம், சுப்பிரமணியன், தேவகி, எஸ்.ஐ.,க்கள் தவமுனி, பார்த்திபன், தினேஷ் அடங்கிய ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
தனிப்படையினர் நாமக்கல்லை சேர்ந்த வேலாயுதம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரை சேர்ந்த கணேஷ்குமார், ரவிச்சந்திரன், காரைக்குடி கழனிவாசல் காளையப்பா நகர் சிந்தரசு, கோவிலூர் பாபாஜான் உள்ளிட்ட 20 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புடைய 90 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் டி.எஸ்.பி., அருண் ஒப்படைத்தார்.
டி.எஸ்.பி., அருண் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக மேற்கண்ட நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களை கைது செய்த போலீசாருக்கு எனது பாராட்டுக்கள். பொதுமக்கள் வீடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றி வருவதை கண்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை