திருவண்ணாமலை : திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அத்திப்பாக்கம் காப்புக்காட்டில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனவர் ஸ்ரீதேவி, வனக்காப்பாளர்கள் லட்சுமி, சிரஞ்சி, மணிவேலன் மற்றும் அலுவலர்கள் அத்திப்பாக்கம் காப்புக்காட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஆண்டியாபாளையம் கிராமத்தை சேர்ந்த பஞ்சமூர்த்தி (36), விக்னேஷ் (26), காட்டுராஜா (29), விஜய் (23), ஆகிய 4 பேரும் சேர்ந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் சென்று 2 புள்ளி மான்கள் மற்றும் 2 முயல்களை வேட்டையாடி அதில் ஒரு மானை 7 கிலோவிற்கு வெட்டி கூறு போட்டும், இறந்த நிலையில் உள்ள மற்றொரு மானை அறுத்து கூறு போட முயன்ற போது வனத்துறையினரிடம் கையும், களவுமாக சிக்கினர். இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து நெற்றி பேட்டரி, தோட்டா, வெடிமருந்துகள், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, 7 கிலோ மான் இறைச்சி, இறந்த நிலையில் ஒரு புள்ளி மான், 2 முயல்கள், முயல் வலைகள், 3 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.