ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் காப்புக்காடு பகுதியில் நேற்று வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்புக் காட்டு பகுதியில், மரம் வெட்டும் சத்தம் கேட்டதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிலர் செம்மரத்தை துண்டுகளாக வெட்டிக்கொண்டு இருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க சென்ற போது மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். அவர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றதில் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா தாடூர் கிராமம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (46), என்பது தெரியவந்தது.
அவரை வனத்துறையினர் கைது செய்தனர். ரூ.5 லட்சம் கட்டைகள் பறிமுதல் அவரிடமிருந்து 546 கிலோ எடை கொண்ட 17 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என வனத்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட விஜயகுமாரை சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், 2014-ம் ஆண்டு பாணாவரம் காப்புக்காடு பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தும் போது இதே நபர் கைது செய்யப்பட்டார். இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. காப்புக்காடு பகுதிகளில், அத்துமீறி நுழைவோர் மீதும், சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீதும், வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்