தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் ஜமீன் செவல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மனைவி காளியம்மாள்(75), இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரியப்பன் இறந்துவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த காளியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 17.08.2019 அன்று காளியம்மாள் தனது மகள் முனியம்மாளுடன் இருக்கன்குடி கோவிலுக்கு சென்றபோது காணாமல் போனததையடுத்து காளியம்மாளை அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் பேருந்து நிலையத்திற்கு வந்த காளியம்மாளை (17.08.2019 அன்று) இரவு ரோந்து பணியிலிருந்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுதாதேவி அவர்கள் காளியம்மாளை பத்திரமாக மீட்டு முடுக்கு மீண்டான் பட்டியிலுள்ள “ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை” ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காளியம்மாள் குணமடைந்து தனது குடும்பத்தை பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு காளியம்மாளின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெபக்குமார் அவர்கள் காளியம்மாளை அவரது உறவினர்களிடம் பத்திரமாக அனுப்பி வைத்தார்.