திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் காணாமல் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகளில், காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 108 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை காவல் ஆணையர் திரு. பிரபாகரன், காவல் துணை ஆணையர் திரு.அபினவ்குமார், ஆகியோர் வழங்கினார்கள். பின்னர் கமிஷனர் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூர் மாநகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் 108 செல்போன்கள் திருட்டு போனதாகவும், காணாமல் போனதாகவும், அதை கண்டுபிடித்து தரக்கோரியும் போலீஸ் நிலையங்களில் புகார் பெறப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில், நீண்ட நாட்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்த செல்போன்களை கண்டுபிடிக்க மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு. சையத் ரபீக் சிக்கந்தர், முதல் நிலைக்காவலர்கள் திரு. சத்தியேந்திரன், திரு. சந்தோஷ்குமார், திரு. ஜெயக்குமார், திரு. அம்சத்குமார், திரு. சக்திவேல் மற்றும் காவலர்கள் திரு. சந்திரன், திரு. நவீன்குமார், ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் , காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படைகாவல்துறையினர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் காணாமல் போன செல்போன்களை பயன்படுத்தி வந்தவர்களை தனிப்படை காவல்துறையினர், கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து 108 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தற்போது அந்த செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் தொடர்பாக விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினரை போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாராட்டி, வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.