சென்னை : காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். `இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்’ எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், `காசிமேடு காவல் ஆய்வாளர் திரு.சிதம்பரமுருகேசனை இடமாற்றம் செய்யக்கூடாது’ என அப்பகுதி பெண்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை காசிமேடு காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியிட மாறுதலை ஏற்க வேண்டாம் என அவர்கள் ஆய்வாளரிடம் கதறினர்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர்களை பணிஇடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி சிவகங்கையை சேர்ந்த திரு.சிதம்பரம் முருகேசன் சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக கடந்த 9 மாதங்களாக பணிபுரியும் சென்னையை அடுத்த அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை அறிந்த காசிமேடு சிங்கார வேலன் நகர் மீனவ பகுதியைச் சேர்ந்த பெண்கள், காசிமேடு சூரிய நாராயண சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிதம்பரம் முருகேசன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தினார்.
எனினும் அந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்கள், காசிமேடு காவல் நிலையத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்லாதீர்கள், நீங்கள் வந்த பிறகுதான் இங்கே குற்றச் செயல்கள் குறைந்திருக்கிறது என நன்றிப் பெருக்கோடு வேண்டுகோள் விடுத்தனர். சிலர் அவரது காலில் விழுந்து கதறி அழுதபடி வேண்டுகோள் விடுத்தது பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.
திரு.சிதம்பரம் முருகேசன் காசிமேடு காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளராக வந்த பிறகுதான், அந்த பகுதியில் கொலை போன்ற குற்றங்கள் குறைந்ததாகவும் பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடிந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
காசிமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் மீனவ சமூக மக்களே அதிகளவில் குடியிருக்கின்றனர். இரவில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலையில் மதுஅருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். மது அருந்தியபிறகு ஏற்படும் தகராறில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள், குடும்பப் பிரச்னை எனக் காசிமேடு காவல் நிலையத்தில் புகார்கள் அணிவகுப்பது வாடிக்கையானது.
மீனவர்கள் காலையில் குடிப்பதால் 45 வயது முதல் 50 வயதுக்குள் இறப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் குடிக்கு அடிமையான மீனவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் வரவழைத்த திரு.சிதம்பரம் முருகேசன் , `காலையில் குடிக்காதீங்க..’ என்பதை வலியுறுத்தியதோடு, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விவரித்தார். இந்த அணுகுமுறைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.