இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. பிரபு அவர்களது குடும்பத்தாருக்கு 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் காக்கி உதவும் கரங்கள் மூலம் தனிப்பட்ட முறையில் வழங்கிய ரூ.25,70,400/- நிதி உதவி தொகையை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா,இ.கா.ப., அவர்கள் காவலர் பிரபு குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார். இராணிப்பேட்டை மாவட்டம் ஆயுதப் படையில் பணியாற்றி வந்த தெய்வத்திரு. பிரபு என்பவர் கடந்த (01.10.2024) தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவர்களின் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு அவருடன் 2011 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழக முழுவதும் உள்ள சக காவலர்கள் காக்கி உதவும் கரங்கள் மூலம் ஒன்று திரண்டு ரூபாய் 25,70,500/- பணத்தை நன்கொடையாக பெற்று அவரின் மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு மொத்தம் 25 லட்சம் LIC வைப்பு நிதியாகவும், அவரது மனைவியின் விருப்பத்தின் பேரில் வயது முதிர்வடைந்த அவருடைய தாய் தந்தையருக்கு ரூபாய் 70,500/- ரொக்க பணமாகவும் நிதி உதவி செய்துள்ளனர். (05.05.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 2011 ஆம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒற்றுமை உணர்வுடன் கருணை உள்ளத்தோடு மேற்படி நிதியை வழங்கிய 2011 ஆம் ஆண்டு காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் 2011 ஆம் ஆண்டு காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.