சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து நேற்று முன்தினம் மாலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்லியம் தலைமையில் காவலர்கள்
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் முகக் கவசம் அணியாமல் இருந்ததற்காக 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரியவருகிறது.
இதுகுறித்து சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி சூரமங்கலம் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டியன் என்பவர் காவல் துறையினரை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவந்தது.
இது தொடர்பாக சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல்,கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்,செல்லப்பாண்டியன்,தமிழரசு
உள்ளிட்ட இருவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். குறிப்பாக செல்லபாண்டியன் அலைபேசி எண்ணை வைத்தும், உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திருப்பூர் அருகே உள்ள அவிநாசியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சேலம் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் அவினாசியில் பதுங்கி இருந்த இருவரையும் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சேலம் அழைத்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.