கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் ராஜபாண்டி (41). ராஜபாண்டி கொத்தனராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி பரணிசெல்வி(39) இவர் லாயல்மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு மனோஜ்குமார்(19) என்ற மகனும், உமாமகேஸ்வரி(15) என்ற மகளும் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதியதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர்.
நேற்று மாலையில் மகன் மனோஜ்குமார் பெட்டிக்கு கடைக்கு சென்றுள்ளார். மகள் உமா வெளியே சென்று விட தம்பதியினர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் மனோஜ் கடையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. வெகுநேரமாக வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படவில்லை, தனது, தாய், தந்தை இருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது இருவரும் எடுக்கவில்லை என்றதும் சந்தேகமடைந்த மனோஜ் அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
இதையெடுத்து அருகில் இருந்தவர்கள் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் கதவினை உடைத்து பார்த்த போது உள்ள பரணிசெல்வி கழுத்தறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.. அதே போன்று ராஜபாண்டியும் கழுத்தறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றிய உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தினை கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் கணவன் -மனைவி கழுத்தறுப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது