திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
19.10.23-ந்தேதி திருச்சி மாநகரில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் 8 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் கண்காணித்து வந்தபோது, திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி திரையரங்கம் மேம்பாலத்தின் கீழ் டிக்கெட்டுகளை திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு வாங்கி சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த வரகனேரியை சேர்ந்த கதிரவன் என்பவரை 18.10.23-ந்தேதி அன்றும், ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த ராஜாபாண்டி, தென்னூரை சேர்ந்த கண்ணன், சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த இர்பான், அரியமங்கலம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் ஆகியோர்களை கைது செய்தும் 19.10.23 மேற்படி நபர்கள் மீது 4 சட்டப்பிரிவுகளின்கீழ் பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.