புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மூங்கித்தான்பட்டியில் உள்ள அரசு மதுபானக் கடையில் சந்தோஷ்குமாா் என்பவா் மது வாங்க வந்துள்ளாா். அவா் கொடுத்த 200 ரூபாய் மீது சந்தேகமடைந்த மதுக்கடை ஊழியா், திருமயம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் படி விசாரணையில், அவா் கொடுத்தது கள்ளநோட்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அவர்களின் உத்தரவின்பேரில், தனிப்படையினரான பொன்னமராவதி துணைக் காவல் கண்காணிப்பாளா் திரு.தமிழ்மாறன், ஆய்வாளா் திரு.கருணாகரன், உதவி ஆய்வாளா்கள் திரு.அன்பழகன், திரு.மாரிமுத்து ஆகியோர்கள் சந்தோஷ்குமாரை அழைத்துக் கொண்டு அவா் கொடுத்த தகவலின்பேரில், கீழ்துருவாசகபுரம் அருகேயுள்ள ஒழுகம்பட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரன், திருமயத்தைச் சோ்ந்த முகமது இப்ராஹிம், முகமது நசுருதீன் மற்றும் சென்னை, நாகா்கோவில் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கள்ளநோட்டு விவகாரத்தில் ஆதாரமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை, நாகா்கோவிலுக்கு விரைந்த தனிப்படையினா், சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சுரேஷ் , நாகா்கோவிலைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். கள்ளநோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 19.05.2020 அன்று ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், இவா்கள் இருவரிடமிருந்து ரூ. 65 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகளும், ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்ட ரூ. 3 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டு அச்சிடுவதற்குப் பயன்படுத்திய கணினி, அச்சிடும் கருவி உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.