தஞ்சை : தஞ்சை மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி .பூரணி அவர்களது உத்தரவின்படி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் மற்றும் காவலர்கள் விஜயகுமார், பிரபாகர், மற்றும் சந்தோஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் பாபநாசம் புறப்பகுதிகளில் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் இன்று (22-6-2023) அதிகாலை அம்மாப்பேட்டை பகுதிகளில் வாகனச் சோதனை மேற்கொண்டார்கள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது அதில் கள்ளத்தனமாக எடுத்து வந்த சுமார் நூறு அரசு மது பாட்டில்கள் இருந்தது. இதனை கண்ட போலீசார் அதனை எடுத்து வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் அம்மாபேட்டை அருகே உள்ள கம்பர் நத்தம் பகுதியை செர்ந்த அய்யாக்கண்ணு மகனான குண்டுமணி (எ) ராஜேந்திரன் (58), என்பதும் இவர் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை அதிகாலையில் இப்பகுதிகளில் வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த சுமார் 100 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்